புதன், 24 செப்டம்பர், 2014


சிலேட்டு ..................
============
காலப்போக்கில் காணமல் போய்வரும் சாதனங்களில் ஒன்று சிலேட்டு . அனேமாக இந்த பதிவை படிக்கும் தோழர்கள் அனைவரும் சிலேட்டை பயன்படுத்தியிருப்போம்.

பள்ளிக்கூடம் செல்லும் முன்பே சிலேட்டு என்ற எழுது சாதனம் எனக்கு அறிமுகமாயிருந்தது. அந்த கல் சிலேட்டு அப்பா வாங்கிவந்த சில மணித்துளிகளிலேயே என்னால் உடைக்கப்பட்டாலும் என் நினைவுச்சிறைகளில் இன்னும் உடையாமல் பத்திரமாக இருந்துவருகிறது.

பல்ப்பம் என்றழைக்கப்படும் சிலேட்டு குச்சி கொண்டு எழுத கற்றுக்கொடுத்த முதல் ஆசான் என் அப்பா தான். நான் எத்தனை முறை உடைத்தாலும் புதுசு வாங்கி கொடுப்பாரே தவிர ஒரு முறைகூட அதட்டியதோ அடித்ததோ கிடையாது. அது என்னவோ தகர சிலேட்டை விட கல் சிலேட்டின் மீது அப்பாவிற்கு அதிக இஷ்டம், எனக்கு அதிகம் கிடைத்ததும் கல் சிலேட்டுதான்.

சிலேட்டு குச்சி பெரியதாக உடையாமல் வேண்டுமெனக்கு. தினமும் பள்ளி கிளம்பியதும் எதை மறந்தாலும் ஒரு குச்சி புதியதாக எடுக்க மறப்பதில்லை. சிலேட்டில் எச்சில் தொட்டு அழித்து ஓன்னாம் வகுப்பு வாத்தியாரிடம் அடி வாங்கிய பொழுதுகள் இன்னும் அழியாமல் மனதில் இருக்கின்றன.

சிலேட்டின் கருமை நிறத்தை கூட்ட கோவலை இலையும் கரியும் சேர்த்து தடவுவோம். சிலேட்டோடு சேர்ந்து சட்டையும் கருமையாகிப்போவும்.

எனது சிலேட்டுகள் எனக்கு எந்த அளவு உபயோகப்ப்ட்டதோ அதே அளவு என் அம்மாவுக்கு பால்
கணக்கு பார்க்கவும் சித்திக்கு கோலம் போட்டு பார்க்கவும் தம்பி தங்கைக்கு விளையாடவும் உதவியிருக்கிறது.

அகர முதல எழுத்துகலெல்லாம் கல் சிலேட்டிலிருந்தே அறிமுகமாயின எனக்கு. உடைந்து போன சிலேட்டுகள் எல்லாம் உடையாத கல்வெட்டு நினைவுகள் எனக்கு.

நீங்கள் இதை படித்துக்கொண்டிருங்கள், நான் சற்று பின்னோக்கி நினைவுகளை திருப்புகிறேன்,

அட,
அதோ வாயில் வைத்து மென்று முனை ஊறிய மாட்டிக்கிற பையில் கல் சிலேட்டு குச்சியோடு
நான் பள்ளி சென்றுகொண்டிருக்கிறேன்....

உங்களின் சிலேட்டு நினைவுகளையும் அ-னா எழுதிய நாட்களையும்
பின்னூட்ட சிலேட்டில் எழுதிச்செல்லுங்களேன்..

செவ்வாய், 8 ஜூலை, 2014

கடைசி தலைமுறை - வலிக்கும் உண்மை..
1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
இன்னும் இது போல் உங்கள் அனுபவத்தை பகிருங்கள்...